சிம்பாப்வே அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற T20I போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. ஆரம்பத்தில் வெறும் 5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆப்கானிஸ்தான், அஸ்மத்துல்லா ஓமர்சாயின் அபார சதத்தின் உதவியுடன் 221 ஓட்டங்களைக் குவித்தது.
மறுபுறம், இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ராசாவும் சதமடித்து அசத்தினார். இதே போட்டியில் ரஷித் கான் சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.
5 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் – அதன்பின் வரலாற்று சாதனை!
ஆப்கானிஸ்தான் அணி வெறும் 5 ஓட்டங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. எனினும், அதன் பின்னர் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைக் குவித்தது.
T20I கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓட்டங்களுக்குள் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்த பின்னர் 200 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற முதல் அணியாக ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது.
இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பின்னர் 212 ஓட்டங்களைப் பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்த T20 கிரிக்கெட்டில் இத்தகைய சாதனையைப் படைத்த இரண்டாவது அணியாகவும் ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது. இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு CPL தொடரில் ஜமைக்கா தலாவாஸ் அணி 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பின்னர் 225 ஓட்டங்களைப் பெற்று வெற்றிகரமாக இலக்கை எட்டியிருந்தது.
மேலும், ஆடவர் T20 கிரிக்கெட்டில் 10 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்த பின்னர் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்த 172 ஓட்டங்கள் என்ற சாதனையையும் ஆப்கானிஸ்தான் முறியடித்தது. 2023ஆம் ஆண்டு T20 Blast தொடரில் பேர்மிங்ஹாம் பியர்ஸ் அணி 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பின்னர் 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஓமர்சாய் – இஜாஸ் அகமட் இணைப்பில் உலக சாதனை!
ஆப்கானிஸ்தான் அணியின் சரிவைத் தடுத்து நிறுத்திய அஸ்மத்துல்லா ஓமர்சாய் மற்றும் இஜாஸ் அகமட் அகமத்சாய் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
T20I கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவது அல்லது அதற்குக் கீழான விக்கெட்டுக்காகப் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக இது பதிவானது.
இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டு பெர்த்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அன்ட்ரே ரசல் மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்காகப் பெற்ற 139 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.
ஓமர்சாய் ஆறாவது இலக்கத்தில் களமிறங்கி 116 ஓட்டங்களைப் பெற்றார். T20I வரலாற்றில் ஆறாவது அல்லது அதற்குக் கீழான இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
பெல்ஜியம் அணியின் ஷஹெரியார் பட் செக் குடியரசுக்கு எதிராக 2020ஆம் ஆண்டு பெற்ற ஆட்டமிழக்காத 125 ஓட்டங்களும், ஸ்லோவேனியாவின் இசாஸ் அலி 2025ஆம் ஆண்டு சேர்பியாவுக்கு எதிராகப் பெற்ற 118 ஓட்டங்களும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
மேலும், முழு அங்கத்துவ நாடொன்றின் வீரர் ஒருவர் T20I போட்டியில் முதல் ஐந்து இலக்கங்களுக்கு வெளியே களமிறங்கி சதமடித்த முதல் சந்தர்ப்பமாகவும் ஓமர்சாயின் சாதனை அமைந்தது. இதற்கு முன்னர் சாம் பில்லிங்ஸ் 2019ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 87 ஓட்டங்கள் பெற்றதே அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
சிக்கந்தர் ராசா – வயதான வீரரின் வரலாற்றுச் சதம்!
சிம்பாப்வே அணித்தலைவர் சிக்கந்தர் ராசா இந்தப் போட்டியில் சதமடித்து மற்றுமொரு சாதனையைப் படைத்தார்.
போட்டி நடைபெற்ற வியாழக்கிழமையன்று அவருக்கு 40 வயதும் 188 நாட்களும் ஆகியிருந்தன. இதன் மூலம் T20I கிரிக்கெட்டில் சதமடித்த அதிக வயதான வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.
இதற்கு முன்னர் ஜிப்ரால்டரின் அவினாஷ் பாய், 2021ஆம் ஆண்டு பல்கேரியாவுக்கு எதிராக 39 வயதும் 272 நாட்களும் ஆன நிலையில் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.
கடைசி 10 ஓவர்களில் ஓட்ட மழை!
ஆப்கானிஸ்தான் அணி தனது இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 176 ஓட்டங்களைக் குவித்தது. முழு அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான T20I போட்டிகளில் கடைசி 10 ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்னர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் திருவனந்தபுரத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பெற்ற 169 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.
சிம்பாப்வே அணியும் தனது இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் 120 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் இரு அணிகளும் இந்தப் பகுதியில் சேர்த்து 296 ஓட்டங்களைப் பெற்றன. T20I போட்டியொன்றில் கடைசி 10 ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
T20 கிரிக்கெட்டில் பந்துவீச்சு அடிப்படையிலான தரவுகள் கிடைக்கும் போட்டிகளில், 2024 IPL தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இணைந்து பெற்ற 299 ஓட்டங்கள் என்ற சாதனையை விட இது மூன்று ஓட்டங்கள் குறைவாகும்.
மேலும் பல சாதனைகளைப் படைத்த போட்டி!
இந்தப் போட்டியில் சிம்பாப்வே அணியின் துரத்தலின்போது சிக்கந்தர் ராசா மற்றும் டஃபஸ்வா சிகா இணைந்து ஆறாவது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இதன் மூலம் ஆறாவது அல்லது அதற்குக் கீழான விக்கெட்டுக்காக இரண்டு சத இணைப்பாட்டங்கள் இடம்பெற்ற முதல் T20 போட்டியாக ஆப்கானிஸ்தான் – சிம்பாப்வே மோதல் பதிவானது.
ஐந்தாவது விக்கெட் வீழ்ந்த பின்னர் இரு அணிகளும் இணைந்து 303 ஓட்டங்களைப் பெற்றன. T20 போட்டி வரலாற்றில் இந்தக் கட்டத்தில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
நான்காவது விக்கெட் வீழ்ந்த பின்னர் இரு அணிகளும் இணைந்து 349 ஓட்டங்களைப் பெற்றன. இதுவும் T20 போட்டிக்கான புதிய சாதனையாகும். ஆப்கானிஸ்தான் அணி மட்டும் நான்காவது விக்கெட்டை இழந்த பின்னர் 216 ஓட்டங்களைக் குவித்தது.
இரு அணிகளும் இணைந்து 423 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற T20I போட்டியொன்றில் பதிவான அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கையாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஷார்ஜாவில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இணைந்து பெற்ற 411 ஓட்டங்களே சாதனையாக இருந்தன.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற T20I போட்டியொன்றில் இரு அணிகளிலும் தலா ஒரு வீரர் சதமடித்த முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவானது.
ரஷித் கான் – T20I கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்!
இந்தப் போட்டியில் தடியவனாஷே மருமானியின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், சர்வதேச T20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம் T20 கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளைக் கடந்த முன்னணி பந்துவீச்சாளராகவும் அவர் திகழ்கிறார்.
ரஷித் கான் கைப்பற்றிய 200 T20I விக்கெட்டுகளில் 150 விக்கெட்டுகள் ஆசிய மண்ணில் கிடைத்துள்ளன. ஒரு பந்துவீச்சாளர் ஆசியாவில் கைப்பற்றிய அதிகூடிய T20I விக்கெட்டுகள் இதுவாகும்.
அவற்றில் 79 விக்கெட்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கிடைத்துள்ளன. ஒரு நாட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இது மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், T20I கிரிக்கெட்டில் ஓர் எதிரணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையும் ரஷித் கானிடமே உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக அவர் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிம்பாப்வே அணிக்கு எதிராக 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், ரயன் பேர்லின் விக்கெட்டை மட்டும் ஏழு முறை கைப்பற்றியுள்ளார்.
ஆடவர் T20I கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரரை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர்களில் ரஷித் கானின் இந்தச் சாதனை முக்கியமானதாகும். ஜெர்சியின் சார்லஸ் பெர்ச்சார்ட், குவெர்ன்சியின் மத்தியூ ஸ்டோக்ஸை எட்டு முறை ஆட்டமிழக்கச் செய்திருப்பது மட்டுமே இதைவிட அதிகமானதாகும்.
ரஷித் கானின் 200 T20I விக்கெட்டுகளில் 142 விக்கெட்டுகள் 7 முதல் 16 வரையிலான இடைநிலை ஓவர்களிலும், 56 விக்கெட்டுகள் 17 முதல் 20 வரையிலான இறுதி ஓவர்களிலும் கிடைத்துள்ளன. முதல் ஆறு ஓவர்களில் அவர் வெறும் 102 பந்துகளை மட்டுமே வீசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
மேலும், T20I இன்னிங்ஸொன்றில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 11 முறை கைப்பற்றியுள்ளார். இந்த வகையில் மற்ற எந்தப் பந்துவீச்சாளரையும் விட இரண்டு முறை அதிகமாக இச்சாதனையைப் படைத்துள்ளார்.
ஒரே போட்டியில் இத்தனை சாதனைகள்! ஓமர்சாயின் வரலாற்றுச் சதம், ராசாவின் அனுபவம் கலந்த அதிரடி மற்றும் ரஷித் கானின் 200ஆவது T20I விக்கெட் என ஆப்கானிஸ்தான் – சிம்பாப்வே போட்டி T20 கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.