இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 13 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அவர் வெள்ளிக்கிழமை தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.

36 வயதான முகமது ஷமி, 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். அறிமுகப் போட்டியிலேயே தனது அபாரமான பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்திய அவர், அந்தப் போட்டியில் மொத்தமாக 118 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக, ரிவர்ஸ் ஸ்விங் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது அவரது சிறப்பம்சமாக அமைந்தது.

இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி, மொத்தமாக 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் ஐந்து இடங்களுக்கு அண்மித்த நிலையில் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்பு தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், “இந்த 13 ஆண்டுகாலப் பயணத்தில் இந்த டெஸ்ட் தொப்பியும், பந்தும் தான் என்னை முகமது ஷமியாக உருவாக்கின. இந்தப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தேன். வீழ்ந்தேன், காயமடைந்தேன், காயங்களால் அவதிப்பட்டேன். ஆனாலும் இந்திய அணிக்காக மீண்டும் மீண்டும் எழுந்து நின்றேன்.

இந்தப் பயணத்தில் எனக்கு உதவிய பயிற்சியாளர்கள், பயிற்சியாளர்கள் குழு, உடற்பயிற்சி நிபுணர்கள், மருத்துவக் குழுவினர் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, என் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் வழங்கிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

2013 நவம்பர் 6ஆம் திகதிதான் எனது டெஸ்ட் அறிமுகம் இடம்பெற்றது. அதே நவம்பர் 6ஆம் திகதியான இன்று எனது 13 ஆண்டுகால டெஸ்ட் பயணத்தை நிறைவு செய்கிறேன். இன்று அறிமுகமானேன், இன்று ஓய்வையும் அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும், ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தனது பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக ஷமி விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும். அந்தப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடவில்லை.

தனது டெஸ்ட் வாழ்க்கையில் 27.71 என்ற பந்துவீச்சுச் சராசரியையும், 50.2 என்ற ஸ்ட்ரைக் ரேட்டையும் பதிவு செய்துள்ளார். இந்திய மண்ணில் விளையாடிய போட்டிகளில் 22.1 என்ற சராசரியுடன் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், ஒவ்வொரு 42.6 பந்துகளுக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

மேலும், இந்திய அணி அவர் விளையாடிய 64 டெஸ்ட் போட்டிகளில் 31 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 13 போட்டிகளைச் சமநிலையில் முடித்துள்ளது. குறிப்பாக, சொந்த மண்ணில் இந்திய அணி பங்கேற்ற எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் ஷமி தோல்வியைச் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் பிறந்த முகமது ஷமி, சிறந்த கிரிக்கெட் வாய்ப்புகளைத் தேடி மேற்கு வங்கத்துக்குச் சென்றார். 2010ஆம் ஆண்டு பெங்கால் அணிக்காக ரஞ்சி கிண்ணத்தில் அறிமுகமான அவர், இன்றுவரை அந்த அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல். தொடரில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷமி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடரவுள்ளார்.

13 ஆண்டுகால டெஸ்ட் பயணம்… 64 போட்டிகள்… 229 விக்கெட்டுகள்! இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கிய முகமது ஷமியின் டெஸ்ட் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.