ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) இருபதுக்கு 20 தொடருக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) எதிர்வரும் கூட்டங்களில் கேள்வியெழுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தத் தொடரில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆப்கானிஸ்தான் அகதிகள் மகளிர் அணியின் தலைவி நஹிதா சபான் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கின் வீரர்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது மொயின் அலி மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட எட்டு இங்கிலாந்து வீரர்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர். இத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், இத்தொடருக்கு இதுவரை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கவில்லை. அதற்கான அனுமதி வழங்கும் நடைமுறை இன்னும் தொடர்கின்றது. மேலும், ஐந்து அணிகளில் மூன்று அணிகளுக்கான உரிமையாளர்கள் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐசிசியின் புதிய பிரான்சைஸ் லீக் துணைக்குழுவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் கோல்ட், தொடருக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதில்லை. இந்நடவடிக்கைகளை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் தாம்சன் கடந்த ஆண்டு ‘பாலின நிறவெறி’ (Gender Apartheid) எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்களுக்கான பிரான்சைஸ் தொடரை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிதியைப் பயன்படுத்துவது குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரிச்சர்ட் கோல்ட் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை பெருமளவில் ஐசிசியின் நிதியுதவியிலேயே தங்கியுள்ளது. வருடாந்தம் சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐசிசியிடமிருந்து பெறுகின்றது. இது அதன் மொத்த வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம்.
அதேவேளை, ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு சந்தையோ அல்லது போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் கணிசமான வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்போ இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கிற்கு ஐசிசியின் நிதி பயன்படுத்தப்படுவதாக நான் கவலைப்படுகின்றேன். ஏனெனில், ஏனைய கிரிக்கெட் சபைகள் ஆப்கானிஸ்தான் மகளிர் அகதிகள் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. எனவே, இது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை. எதிர்வரும் வாரங்களில் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கில் ஒப்பந்தம் செய்துள்ள எட்டு இங்கிலாந்து வீரர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழ்களை (NOC) வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. அவ்வாறு சான்றிதழ்களை வழங்க மறுப்பது, வீரர்களின் தொழில் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டு சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதே இதற்கான காரணமாகும்.
எனினும், ஐசிசியின் அனுமதி கிடைப்பதற்கு முன்னரே வீரர்கள் ஏலத்தை நடத்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நடவடிக்கை தங்களைச் சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளதாக ரிச்சர்ட் கோல்ட் குறிப்பிட்டுள்ளார். வீரர்களை நேரடியாக விமர்சிப்பதை விட, இந்தத் தொடருக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகளில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னர் வீரர்களுடன் கலந்துரையாடி அவர்கள் தங்களது பங்கேற்பின் பின்னணியைப் புரிந்துகொள்ளச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் மகளிர் அணியின் தலைவியான நஹிதா சபான், வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க முன்வந்துள்ளமை ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசியின் ‘Stumped’ நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“வெளிநாட்டு வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளமை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. ஆப்கானிஸ்தானின் மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக நிற்பதற்கான ஒரு உண்மையான வாய்ப்பு வெளிநாட்டு வீரர்களுக்கு இருந்தது. இந்தத் தொடரில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் அவர்கள் வலுவான செய்தியொன்றை வெளிப்படுத்தியிருக்க முடியும்.
இது கிரிக்கெட்டுக்கு எதிரான நிலைப்பாடோ அல்லது ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு எதிரான நிலைப்பாடோ அல்ல. அடிப்படை மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது பற்றியதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.












Comments (0)
Be the first to share your thoughts.