2027ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடர் ஜனவரி 14ஆம் திகதி முதல் பெப்ரவரி 7ஆம் திகதி வரை இந்தியாவின் வடோதரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. நடப்புச் சம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், முதலாவது WPL தொடரின் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதும் போட்டியுடன் இம்முறை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆரம்பப் போட்டி வடோதராவில் நடைபெறும்.

இரு நகரங்களிலும் தலா 11 போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஜனவரி 14ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை வடோதராவின் கோட்டாம்பி மைதானத்தில் முதல் 11 லீக் போட்டிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஒருநாள் இடைவெளிக்குப் பின்னர், போட்டிகள் மும்பையின் பிரபோர்ன் மைதானத்திற்கு மாற்றப்படும்.

மும்பையில் ஜனவரி 26ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை ஒன்பது லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து பெப்ரவரி 5ஆம் திகதி எலிமினேட்டர் போட்டியும், பெப்ரவரி 7ஆம் திகதி இறுதிப் போட்டியும் இடம்பெறும். அனைத்து போட்டிகளும் இந்திய உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

WPL தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள் இங்கிலாந்து மகளிர் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்துடன் மோதுகின்றன. இங்கிலாந்து அணி பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை இலங்கைக்கு எதிராக மூன்று T20 போட்டிகளில் விளையாடவுள்ளது. எனினும், WPL தொடரின் இறுதிக்கட்டத்துக்குத் தகுதி பெறும் அணிகளில் இடம்பெற்றுள்ள நட்சத்திர இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு இந்த இருதரப்புத் தொடரிலிருந்து விலக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணித் தலைவி நாட் ஸ்கிவர்-பிரன்ட் (மும்பை இந்தியன்ஸ்), லோரன் பெல் (RCB), சோஃபி எக்லஸ்டோன் (UP வாரியர்ஸ்) ஆகியோர் தத்தமது WPL அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், WPL தொடர் நிறைவடைந்த ஒரு வாரத்திற்குப் பின்னர், முதலாவது ஆறு அணிகள் பங்கேற்கும் மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இதே வடோதரா மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற WPL 2027 வீராங்கனைகள் ஏலத்தில், அவுஸ்திரேலிய அணித் தலைவி சோஃபி மோலினியூஸ் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாகப் பதிவானார். அவரை UP வாரியர்ஸ் அணி இந்திய மதிப்பில் 1.10 கோடி ரூபாய்க்கு (சுமார் 120,000 அமெரிக்க டொலர்கள்) ஒப்பந்தம் செய்தது. இந்திய வீராங்கனைகளில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனை கிரண் நாக்விரே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை டெல்லி கெபிடல்ஸ் அணி 75 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற WPL தொடரும் நவி மும்பை மற்றும் வடோதரா ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட்டது. எனினும், நவி மும்பையிலுள்ள DY பாட்டீல் மைதானம் தற்போது புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இம்முறை போட்டிகள் அங்கு நடைபெறாது. வடோதரா குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் சொந்த மைதானமாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமாக மும்பை பிரபோர்ன் மைதானமும் அமையவுள்ளன.