இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்னர் மீண்டும் ஒருமுறை உடற்தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இரானி கிண்ணத் தொடரின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ரிஷப் பந்த் காயமடைந்தார். இதனையடுத்து பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) Centre of Excellence (CoE) மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த வார இறுதியில் அவருக்கு ஆரம்பகட்ட உடற்தகுதிப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னர் மேலும் சில நாட்கள் அவரது உடற்தகுதியைக் கண்காணிக்க மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்தால், எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி லிங்கனில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து ஏ அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் இடையிலான மூன்றாவது நான்கு நாள் போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக போட்டி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக இது அமையும்.

தேர்வாளர்கள் ரிஷப் பந்தை இந்தியா ஏ அணியிலும், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இணைத்திருந்தனர். எனினும், அவரது பங்கேற்பு உடற்தகுதி அனுமதியைப் பொறுத்தே அமையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காயம் காரணமாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு நான்கு நாள் போட்டிகளிலிருந்தும் அவர் விலகியிருந்தார். அவருக்குப் பதிலாக இளம் வீரர் குமார் குஷாக்ரா அணியில் இணைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அந்தப் போட்டிகளில் இந்தியா ஏ அணியின் விக்கெட் காப்பாளராக துருவ் ஜுரேல் செயற்பட்டிருந்தார். அவரும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மூன்றாவது நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டிக்குப் பின்னர் பும்ரா எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள Centre of Excellence இல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கான தயார்நிலைப் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ரிஷப் பந்தின் உடற்தகுதி குறித்த இறுதி முடிவு இந்திய அணிக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.