சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), கிரிக்கெட் போட்டிகளுக்கான விளையாட்டு விதிகளில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. 2026 அக்டோபர் 1 முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதில் முக்கியமாக, போட்டியின் போது தொடர்ந்து நேரத்தை வீணடிக்கும் பேட்டர்களின் அணிக்கு 5 ரன்கள் அபராதமாக வழங்கும் விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3வது முறையில் 5 ரன்கள் அபராதம்!
ஒரு இன்னிங்ஸில் பேட்டர் மூன்று முறை பந்தை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் போட்டியின் நேரத்தை தாமதப்படுத்தினால், எதிரணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்படும்.
முதல் முறையில் நடுவர் பேட்டருக்கு எச்சரிக்கை வழங்குவார். இரண்டாவது முறையில் இறுதி எச்சரிக்கை வழங்கப்படும். மூன்றாவது முறையிலும் அதற்குப் பிறகும் இதே தவறு தொடர்ந்தால், பீல்டிங் அணிக்கு ஒவ்வொரு முறையும் 5 ரன்கள் வழங்கப்படும்.
புதிய விதியின்படி, பந்துவீச்சாளர் தனது ரன்-அப்பின் உச்சியை அடையும் நேரத்தில் பேட்டர் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். விக்கெட் வீழ்ந்த பிறகு களத்திற்கு வரும் புதிய பேட்டருக்கு முதல் பந்தை எதிர்கொள்ள தயாராக 2 நிமிடங்கள் வழங்கப்படும்.
80 ஓவர்களுக்குப் பிறகு எச்சரிக்கைகள் Reset!
பல நாள் போட்டிகளில் இந்த எச்சரிக்கை கணக்கு தொடர்ந்து செல்லாது. ஒவ்வொரு 80 ஓவர்கள் முடிந்த பிறகும் நேரத்தை வீணடித்ததற்கான எச்சரிக்கைகள் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.
அதாவது, ஒரு 80 ஓவர் கட்டத்தில் இரண்டு எச்சரிக்கைகளை பெற்றிருந்தாலும், அடுத்த 80 ஓவர் கட்டத்தில் அந்த கணக்கு தொடராது.
பெண்கள் கிரிக்கெட்டுக்கு தனி பந்து அளவு!
பெண்கள் கிரிக்கெட்டிலும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி ஆண்கள், பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டுக்காக தனி அளவு மற்றும் எடையைக் கொண்ட கிரிக்கெட் பந்துகளுக்கான விதிமுறைகள் இருக்கும்.
இதற்கு முன்பு சில உற்பத்தியாளர்கள் பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டுக்கு ஒரே அளவிலான பந்துகளை தயாரித்து வந்த நிலையில், தற்போது ICC மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனி அளவு மற்றும் எடை வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
பகல் நேர டெஸ்ட்களிலும் Pink Ball பயன்படுத்தலாம்
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில மாற்றங்களும் புதிய விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
அதில் ஒன்றாக, பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலும் Pink Ball பயன்படுத்துவதற்கு அனுமதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல நாள் போட்டியில் ஒரு நாளின் கடைசி ஓவரில் விக்கெட் வீழ்ந்துவிட்டால் உடனடியாக அந்த நாளுக்கான ஆட்டம் முடிவடைய வேண்டும் என்ற கட்டாயமும் நீக்கப்பட்டுள்ளது. தேவையான சூழ்நிலையில் அந்த ஓவர் தொடர்ந்து விளையாடப்படலாம்.
பந்து எப்போது “Settled” ஆகும்?
பந்து முழுமையாக நிலைபெற்றுவிட்டதா என்பதை தீர்மானிப்பதில் நடுவர்களுக்கு தற்போது கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக போட்டியின் கடைசி பந்தில் இது முக்கியமானதாக இருக்கலாம். புதிய விதியின்படி, பந்து கட்டாயமாக பந்துவீச்சாளர் அல்லது விக்கெட் கீப்பரின் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை; நடுவர் பந்து இறுதியாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தீர்மானிக்க முடியும்.
Run-out, Stumping விதியிலும் தெளிவு
Run-out அல்லது Stumping செய்வதற்கு, பீல்டர் அல்லது விக்கெட் கீப்பர் பந்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ICC தெளிவுபடுத்தியுள்ளது.
வெறும் பந்தைத் தொட்டு, அதே நேரத்தில் ஸ்டம்புகளை உடைப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. பந்து முழுமையாக கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அந்த Run-out அல்லது Stumping செல்லுபடியாகும்.
இந்த புதிய ICC விளையாட்டு விதிகள் 2026 அக்டோபர் 1 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அமலுக்கு வருகின்றன.












Comments (0)
Be the first to share your thoughts.