IPL 2027 தொடருக்கான பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம் – கீரன் பொலார்டுடன் இணையும் முன்னாள் வீரர்கள்!

முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும், இரண்டு முறை IPL சம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம்பெற்றவருமான ரொபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL 2027 தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தனது பயிற்சியாளர் குழுவில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி, நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், டி. திலீப் களத்தடுப்புப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தவால் குல்கர்னி வளர்ச்சிப் பிரிவு பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். இவர்கள் அனைவரும் புதிய தலைமைப் பயிற்சியாளர் கீரன் பொலார்டுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம்!

கடந்த வாரம் மஹேல ஜயவர்தனவுக்குப் பதிலாக கீரன் பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பந்துவீச்சுப் பயிற்சியாளர்களான லசித் மலிங்கா மற்றும் பரஸ் மாம்ப்ரே ஆகியோருடனான ஒப்பந்தத்தை அணி முடிவுக்குக் கொண்டுவந்தது. அதேபோன்று களத்தடுப்புப் பயிற்சியாளர் கார்ல் ஹொப்கின்சனும் அணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக தற்போது புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பும் உத்தப்பா!

ரொபின் உத்தப்பா மற்றும் மிட்செல் மெக்லெனகன் ஆகிய இருவரும் தங்களது வீரர் காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர்கள்.

2008ஆம் ஆண்டு IPL தொடரின் முதல் பருவத்தில் உத்தப்பா மும்பை அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் ஐந்து வெவ்வேறு IPL அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் 2014ஆம் ஆண்டிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2021ஆம் ஆண்டிலும் IPL சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 205 IPL போட்டிகளில் விளையாடியுள்ள உத்தப்பா, 4,952 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஒரேயொரு பருவத்தில் 14 போட்டிகளில் 320 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவரது துடுப்பாட்ட சராசரி 30.58 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 114.69 ஆகவும் இருந்தது.

மும்பை அணிக்குத் திரும்புவது குறித்து உத்தப்பா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“நான் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியிருப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். எனது IPL வீரர் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸ் அணியில்தான் ஆரம்பித்தேன். இப்போது எனது IPL பயிற்சியாளர் வாழ்க்கையையும் அதே அணியில் ஆரம்பிக்கிறேன். இது விதியின் விளையாட்டு என்றே தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரசிகர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டிய சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளூர் வீரர்கள் சுதந்திரமாகத் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையையும் தெளிவையும் வழங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருக்கும் அதே உற்சாகத்தையும் ஆற்றலையும் வெளிநாட்டு மைதானங்களிலும் வெளிப்படுத்துவதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

மெக்லெனகன், குல்கர்னி, டி. திலீப் – புதிய பொறுப்புகள்!

முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் மெக்லெனகன், 2015 முதல் 2019 வரை ஐந்து பருவங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

56 போட்டிகளில் 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் IPL சம்பியன் பட்டம் வென்ற அணிகளிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்திய அணிக்காக 12 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், இரண்டு T20I போட்டிகளிலும் விளையாடிய தவால் குல்கர்னி, 2008 முதல் 2013 வரையும், பின்னர் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகப் பணியாற்றியுள்ளார்.

2013 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் சம்பியன் பட்டம் வென்ற அணிகளிலும் அவர் இடம்பெற்றிருந்தார். IPL போட்டிகளுக்கு மேலதிகமாக 2012-13 சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்சியாளரான டி. திலீப், 2021ஆம் ஆண்டு முதல் 2024-25 பார்டர் – கவாஸ்கர் கிண்ணத் தொடர் வரையும் இந்திய அணியுடன் பணியாற்றினார். பின்னர் 2025ஆம் ஆண்டிலும் ஓராண்டு காலம் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

டிசம்பர் 16 – மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் சவால்!

புதிய பயிற்சியாளர் குழுவின் முதல் முக்கியப் பணியாக IPL 2027 தொடருக்கான மினி ஏலம் அமையவுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் இந்த மினி ஏலம் நடைபெறவுள்ளது.

புதிய தலைமைப் பயிற்சியாளர் கீரன் பொலார்ட் தலைமையில், உத்தப்பா உள்ளிட்ட புதிய பயிற்சியாளர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை மீண்டும் சம்பியன் பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கவுள்ளனர்.