மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 27 இடங்களுக்காக மொத்தம் 146 வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.

இதில், அவுஸ்திரேலிய அணியின் தலைவி சோஃபி மோலினியூ மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீராங்கனை சோபியா டங்க்லி ஆகிய இருவர் மட்டுமே அதிகபட்ச அடிப்படை விலையான இந்திய ரூபாய் 50 இலட்சத்துக்கு தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

146 வீராங்கனைகள் – 27 இடங்கள்!

ஏலத்தில் பங்கேற்கும் 146 வீராங்கனைகளில் 119 இந்திய வீராங்கனைகளும், 27 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீராங்கனைகளில் 22 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்களாகவும், 97 பேர் சர்வதேச அறிமுகம் பெறாதவர்களாகவும் உள்ளனர். இந்திய வீராங்கனைகளுக்காக 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வீராங்கனைகளில் 14 பேர் சர்வதேச அனுபவம் கொண்டவர்கள். 13 பேர் சர்வதேச அறிமுகம் பெறாதவர்கள். அத்துடன், இணை உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஆறு வீராங்கனைகளும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளுக்காக ஏழு இடங்கள் உள்ளன.

ரூ.40 இலட்சம் அடிப்படை விலையில் முக்கிய வீராங்கனைகள்!

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜி. கமலினி, UP வாரியர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கிரண் நவ்கிரே, ஹீதர் கிரஹாம் மற்றும் ஜெஸ் ஜோனாசன் ஆகியோர் ரூ.40 இலட்சம் அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், மொத்தம் 30 வீராங்கனைகள் ரூ.30 இலட்சம் அடிப்படை விலையில் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஏலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீராங்கனை டியான்ட்ரா டாட்டின், டெல்லி கெபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் அலானா கிங் ஆகியோர் பதிவு செய்யவில்லை.

கடந்த சீசனில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த லிசெல் லீயும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்யவில்லை.

WPL தொடரைத் தவிர்க்கும் இங்கிலாந்து வீராங்கனைகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த சோபியா டங்க்லி மற்றும் கைரா சத்லி ஆகிய இருவர் மட்டுமே WPL 2027 ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். கைரா சத்லி ரூ.10 இலட்சம் அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளார்.

டேனி வையட்-ஹாட்ஜ், அலிஸ் கேப்ஸி, டானி கிப்சன், லாரன் ஃபைலர் மற்றும் லின்சி ஸ்மித் உள்ளிட்ட பல இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்த ஆண்டு WPL தொடரில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக, பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இலங்கையில் இங்கிலாந்து மகளிர் அணி மூன்று T20I போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர் WPL தொடரின் இறுதி வாரத்துடன் மோதக்கூடும்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB), WPL தொடரை முழுமையாக நிறைவு செய்வதற்காக வீராங்கனைகளுக்கு இந்தியாவில் தங்க அனுமதி வழங்க வாய்ப்பிருந்தாலும், அடுத்ததாக நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு முன்னதாக சர்வதேசப் போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கப் பல வீராங்கனைகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், WPL தொடரில் வழங்கப்படும் ஊதியமும் சில இங்கிலாந்து வீராங்கனைகள் பங்கேற்காததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தின் தி ஹன்ட்ரட் தொடரில் கடந்த ஆண்டு சில வீராங்கனைகள் 1.90 இலட்சம் பவுண்டுகள் வரை சம்பாதித்த நிலையில், WPL ஏலத்தின் அதிகபட்ச அடிப்படை விலை ரூ.50 இலட்சமாக மட்டுமே உள்ளது.

மோலினியூவின் WPL அனுபவம்!

சோஃபி மோலினியூ 2024ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் பத்து போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், ஓவருக்கு சராசரியாக 7.31 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

2025ஆம் ஆண்டு தொடருக்காகவும் பெங்களூரு அணியால் தக்கவைக்கப்பட்ட அவர், முழங்கால் காயம் காரணமாக அந்த சீசனில் விளையாட முடியாமல் போனது.

மறுபுறம், சோபியா டங்க்லி 2023ஆம் ஆண்டு குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். 2024ஆம் ஆண்டு ஏலத்தில் பங்கேற்காத அவர், 2025ஆம் ஆண்டு ஏலத்தில் விலைபோகாமல் இருந்தார்.

ரூ.30 இலட்சம் அடிப்படை விலையில் முன்னணி வீராங்கனைகள்!

அவுஸ்திரேலிய சகலதுறை வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ், இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து, தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் நோன்குலுலேகோ ம்லாபா மற்றும் சகலதுறை வீராங்கனை சோலி ட்ரையன் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகள் ரூ.30 இலட்சம் அடிப்படை விலையில் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஒன்பது வீராங்கனைகளை விடுவித்துள்ள UP வாரியர்ஸ் அணி, ஏலத்தில் ரூ.3.75 கோடி என்ற அதிகபட்ச ஏலத் தொகையுடன் களமிறங்கவுள்ளது.

இந்த நிலையில், அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீராங்கனைகளை எந்த அணிகள் கைப்பற்றப் போகின்றன என்பதையும், புதிய வீராங்கனைகளுக்கு எத்தகைய வாய்ப்புகள் கிடைக்கப் போகின்றன என்பதையும் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.