இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ணத்தில் மிசோரம் அணிக்காக விளையாடும் 29 வயதான துடுப்பாட்ட வீரர் சின்மய் சுதார், ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முதல்தரக் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நாகாலாந்து அணிக்கு எதிராக சோவிமாவில் நடைபெற்ற ரஞ்சி கிண்ணத் தொடரின் பிளேட் பிரிவு போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தனது இரண்டாவது முதல்தரப் போட்டியிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ள சுதார், பிரித்வி ஷாவின் 379 ஓட்டங்கள் என்ற சாதனையையும் முறியடித்து, ரஞ்சி கிண்ண வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளார்.

155ஆவது ஓவரில் 400 ஓட்டங்கள்!

தேநீர் இடைவேளையின்போது 392 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த சின்மய் சுதார், தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 155ஆவது ஓவரில் தனது 400ஆவது ஓட்டத்தைப் பூர்த்தி செய்தார்.

அவர் இந்தச் சாதனையை எட்டியபோது, மிசோரம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 581 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து மிசோரம் அணி தனது முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்வதாக அறிவித்தது.

கடைசி விக்கெட்டுக்காக லால்ரெம்புனியா சாக்சுவாக்குடன் இணைந்து சுதார் ஆட்டமிழக்காமல் 189 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டார். ரஞ்சி கிண்ண வரலாற்றில் கடைசி விக்கெட்டுக்கான மூன்றாவது அதிகபட்ச இணைப்பாட்டமாக இது பதிவாகியுள்ளது.

இந்தச் சாதனை இணைப்பாட்டில், 1991-92 பருவத்தில் டெல்லி அணிக்காக அஜய் சர்மா மற்றும் மணீந்தர் சிங் இணைந்து மும்பை அணிக்கு எதிராகப் பெற்ற 233 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியவில்லை.

பிரித்வி ஷாவின் சாதனையை முறியடித்தார்!

ரஞ்சி கிண்ண வரலாற்றில் இதற்கு முன்னர் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் பெற்ற வீரர்களில் பிரித்வி ஷா 379 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். தற்போது 400 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள சுதார், அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

எனினும், ரஞ்சி கிண்ணத்தில் ஒரே இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனை இன்னும் பி.பி. நிம்பால்கரிடமே உள்ளது. 1948-49 பருவத்தில் மகாராஷ்டிரா அணிக்காக கத்தியாவார் அணிக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 443 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

முதல்தரக் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற 12ஆவது சாதனையாகவும் சுதாரின் ஆட்டம் அமைந்துள்ளது. இந்தப் பட்டியலில் பிரையன் லாராவின் ஆட்டமிழக்காத 501 ஓட்டங்களே அதிகபட்சமாக உள்ளன.

மேலும், தனது முதல் முதல்தரச் சதத்தையே 400 ஓட்டங்களாக மாற்றிய முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் சுதார் படைத்துள்ளார். இதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டு மிசோரம் அணிக்கு எதிராக பீகார் வீரர் சாகிபுல் கனி தனது முதல் முதல்தரச் சதத்தை 341 ஓட்டங்களாக உயர்த்தியதே சாதனையாக இருந்தது.

மும்பையிலிருந்து மிசோரம் அணிக்கு வந்த வீரர்!

சின்மய் சுதார் முன்னதாக மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே கிண்ணத் தொடரிலும் மும்பை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேலும், மும்பை T20 லீக் தொடரில் MSC மராத்தா ரோயல்ஸ் அணியின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடரில் தொடர்ந்து இரண்டு அரைச்சதங்களைப் பதிவு செய்த அவர், ஆறு இன்னிங்ஸ்களில் 212 ஓட்டங்களை குவித்தார். அவரது துடுப்பாட்ட வேகம் 120ஐ நெருங்கியிருந்தது.

2026-27 பருவம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மும்பை கிரிக்கெட் சங்கத்திடமிருந்து தடையின்மைச் சான்றிதழைப் பெற்று மிசோரம் அணியில் இணைந்தார்.

மிசோரம் அணிக்காக தனது முதல் ரஞ்சி கிண்ணப் போட்டியில் மணிப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய சுதார், முதல் இன்னிங்ஸில் 35 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 99 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இருப்பினும், அந்தப் போட்டியில் மிசோரம் அணி மூன்று விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.

தற்போது தனது இரண்டாவது முதல்தரப் போட்டியிலேயே 400 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள சின்மய் சுதார், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.