நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரை 3-2 எனக் கைப்பற்றிய இந்திய அணியின் செயல்பாடுகளைத் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
போதிய பயிற்சி நேரம் கிடைக்காத நிலையிலும், நியூசிலாந்தின் மாறுபட்ட ஆடுகளங்கள் மற்றும் காலநிலைக்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக்கொண்டு விளையாடிய விதம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வீரர்கள் முதலாவது T20I போட்டிக்கு முன்னதாக வெறும் 24 மணிநேரம் மட்டுமே தயாராகும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அணியில் இருந்த பல வீரர்களுக்கு நியூசிலாந்தில் விளையாடிய அனுபவமும் இருக்கவில்லை. மைதானங்களின் வித்தியாசமான அமைப்பு, காற்றின் தாக்கம் உள்ளிட்ட சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இருப்பினும், முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று இந்தியா தொடரில் ஆதிக்கம் செலுத்தியது.
குறைந்த தயாரிப்பு – அதிகபட்ச ஆக்ரோஷம்!
ஹமில்டனில் நடைபெற்ற ஐந்தாவது T20I போட்டிக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய கௌதம் கம்பீர்,
“வெற்றியைத் தாண்டி, இந்த வீரர்கள் மாறுபட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்ட விதமும், முதல் மூன்று போட்டிகளில் வெளிப்படுத்திய ஆக்ரோஷமும் மிகவும் சிறப்பானவை.
முதலாவது போட்டியில் 226 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்தினோம். இரண்டாவது போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்தபோது மூன்று இளம் வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரேயொரு பயிற்சி அமர்வுக்குப் பின்னர் களமிறங்கி, 14 ஓவர்களுக்கும் குறைவான நேரத்தில் 199 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது உண்மையான ஆக்ரோஷமான கிரிக்கெட். அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற விரும்பினோம். ஆனால் சில நேரங்களில் நமக்குச் சாதகமாக அனைத்தும் அமையாது.
இந்தத் தொடரில் வீரர்கள் அழுத்தத்தையும், மாறுபட்ட சூழ்நிலைகளையும் கையாண்ட விதமே மிகப்பெரிய சாதனை” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் பெரும்பாலும் வெற்றிப் பெறுபேறுகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், ஒரு போட்டியில் தோல்வியடைந்திருந்தால் அணியின் தயாரிப்பு குறித்துப் பேசாமல் விமர்சனங்கள் எழுந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தத் தொடரை நாம் வென்றிருக்காவிட்டால், ஒரேயொரு பயிற்சி அமர்வு மட்டுமே கிடைத்தது என்பதை யாரும் பேசமாட்டார்கள். உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் இந்திய அணி எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்றுதான் விமர்சித்திருப்பார்கள். இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் முடிவுகளை மட்டுமே பார்க்கிறார்கள். வேறு எதையும் கவனிப்பதில்லை” என கம்பீர் கூறினார்.
கடந்த இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகளாக இந்திய அணி அதிக ஆபத்துகளை ஏற்று, அதற்கேற்ற அதிக பலன்களைப் பெறும் ஆட்டமுறையைப் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த அணுகுமுறையில் சில போட்டிகளில் தோல்வியடைவோம். சில நேரங்களில் ஒருதலைப்பட்சமான தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதிர்காலத்திலும் அது நடக்கலாம். ஆனால் எங்களுடைய கொள்கையும் ஆட்டத் தத்துவமும் மாறாது” என அவர் உறுதியாகக் கூறினார்.
அணித்தலைவராக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டு!
இந்திய அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது தலைமைத்துவத்தில் தற்போது மூன்று இருதரப்பு T20I தொடர்களை வென்றுள்ளார். ஆரம்பத்தில் இரண்டு தொடர்களில் தோல்வியடைந்திருந்த அவர், தற்போது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டுவந்துள்ளார்.
மேலும், ஐயர் தலைமையிலான இந்திய அணி ஜப்பானுக்கு எதிரான ஒரேயொரு T20I போட்டியிலும் வெற்றி பெற்றதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளது.
ஐயரின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய கம்பீர், அனுபவம் குறைந்த பந்துவீச்சுப் பிரிவைக் கொண்ட அணியை வழிநடத்துவது எளிதான காரியமல்ல என்றும் குறிப்பிட்டார்.
“ஷ்ரேயாஸ் பொறுப்பேற்றபோது, உலகக் கிண்ணத்தை வென்றதுடன் இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு தொடரிலும் தோல்வியடையாத மிகவும் வலுவான T20 அணியையே அவர் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்றபோது பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்தோம். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற இடங்களில் அனுபவமற்ற வீரர்களுடன் விளையாடுவது சவாலானது.
ஆனால் அடுத்த உலகக் கிண்ணத்திற்கான அணியைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, வெளிநாட்டுப் போட்டிகளின் அனுபவத்தையும் வழங்க வேண்டும்.
அனுபவமற்ற பந்துவீச்சுப் பிரிவுடன் ஷ்ரேயாஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஓர் அணித்தலைவரின் திறமை என்பது அவரது துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகளையும் பொறுத்தது” என கம்பீர் தெரிவித்தார்.
அபிஷேக் சர்மாவின் பலவீனம் – கவனம் செலுத்தும் கம்பீர்!
இந்தியாவின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா, ஓஃப் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராகத் தடுமாறி வருவது குறித்து கம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
எதிரணிகள் தற்போது அபிஷேக்கின் பலவீனத்தை அடையாளம் கண்டுள்ளதால், அதற்கேற்ப பந்துவீச்சுத் திட்டங்களை வகுத்து வருகின்றன.
இதுகுறித்து கம்பீர் கூறுகையில்,
“ஆம், அபிஷேக் ஓஃப் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராகச் சிரமங்களைச் சந்தித்துள்ளார். அதனைச் சிறப்பாக எதிர்கொள்ள அவர் கற்றுக்கொண்டால், ஒட்டுமொத்தமாக இன்னும் சிறந்த வீரராக மாறுவார்.
எதிரணிகள் உங்களுடைய ஆட்டத்தைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும். நீங்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாடுகிறீர்கள், எவ்வளவு ஓட்டங்களைப் பெறுகிறீர்கள், எந்த வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்கிறீர்கள் என அனைத்தையும் கவனிப்பார்கள். எனவே வெவ்வேறு வகையான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக்கொண்டால், எதிரணியை விட ஒரு படி முன்னேற முடியும்.
முதலாவது போட்டியிலும் ஓஃப் ஸ்பின்னருக்கு எதிராக அவர் சற்று தடுமாறினார். ஓஃப் ஸ்பின் மட்டுமன்றி, இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசியபோதும் சிக்கல்களை எதிர்கொண்டார். இதுகுறித்து அவருடன் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பேசினோம்” எனக் குறிப்பிட்டார்.
தொடரை 3-2 எனக் கைப்பற்றிய இந்தியா, அடுத்த உலகக் கிண்ணத்திற்கான அணியை உருவாக்கும் முயற்சியிலும் இளம் வீரர்களுக்கு அனுபவத்தை வழங்கி வருகிறது. தோல்விகள் வந்தாலும் தங்களது அதிரடி ஆட்டமுறையை மாற்றப்போவதில்லை என்பதில் கம்பீர் உறுதியாக உள்ளார்.












Comments (0)
Be the first to share your thoughts.