புத்தளம் மாவட்டத்தில் ஒரு போட்டோ பிரதி எடுப்பதற்காக 850 ரூபாய் அதிகட்டணம் அறவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகளும் தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து, செப்டெம்பர் 25ஆம் திகதி அதிகாரிகள் குறித்த கடையில் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறும் வகையில் அதிக விலை அறவிட்டமைக்கான முதற்கட்ட ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதிகார சபை, சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அத்துடன், சந்தையில் இடம்பெறும் நியாயமற்ற விலையிடல், போலிப் பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தக முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Comments (0)
Be the first to share your thoughts.