இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது!

​நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

​குறிப்பாக, வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில், 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வட மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் காலையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

​இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம் என்பதால், வாகன ஓட்டிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.